search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கால் அகற்றம்"

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றப்பட்டது. ஒரே மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக அவரது பெற்றோர் கதறி அழுதனர். #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் கிளாட்வின். சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பிரின்ஸ்டன் (வயது 22). இவர் பாலிடெக்னிக் படித்து உள்ளார். தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளாண்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திய உணவுக்கழக குடோன் அருகே சென்றபோது, அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் வலது காலில் குண்டு பாய்ந்தது.

    இதனால் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழே சிதைந்துவிட்டது. இதனால் அவரது காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழ் பகுதி ஆபரேசன் மூலமாக முழுமையாக அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரின்ஸ்டன் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    இதுகுறித்து பிரின்ஸ்டனின் பெற்றோர் கதறி அழுதபடி கூறியதாவது:-


    பிரின்ஸ்டன் எங்களுக்கு ஒரே மகன். இதனால் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தோம். அவன் எப்போதும் எங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் கிடைத்த வேலைக்கு கூட அனுப்பாமல் இருந்தோம். சமீப காலமாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

    கடந்த 22-ந் தேதி அவன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது, போராட்டம் நடந்து உள்ளது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டனின் வலது காலில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பிரின்ஸ்டனை ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவனுக்கும், போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இந்தநிலையில் பிரின்ஸ்டனின் வலது காலில் முட்டுக்கு கீழ் பகுதி சிதைந்துவிட்டது என்றும், அதை ஆபரேசன் மூலம் அகற்ற வேண்டும் என்றும் டாக்டர் அறிவுறுத்தினார்கள். அதன்படி எங்களது மகனின் வலது கால் அகற்றப்பட்டு உள்ளது. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவனது வருமானத்தை மட்டுமே நாங்கள் நம்பியிருந்தோம். அவனது கால் அகற்றப்பட்டதால் அவனது எதிர்காலம் மட்டுமின்றி எங்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.

    ஆஸ்பத்திரியில் அவனை சந்தித்த துணை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசு வேலை தருவதாக கூறி உள்ளனர். காலை இழந்து உள்ள பிரின்ஸ்டனுக்கு கூடுதல் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர். #Sterlite #SterliteProtest #Thoothukudi
    ×